வல்லம் வல்லம் ஒரு தொல்பழங்கால, வரலாற்றுக்கால இடமாகும். அமைவிடம் வல்லம் தஞ்சாவூருக்கு வடமேற்கே, திருச்சி செல்லும் சாலையில் சுமார், 7 கி.மீ தொலைவில் உள்ளது. காவிரிப்படுகைக்குத் தெற்கே அமைந்துள்ள வல்லம்மேடு எனப்படும் பகுதியில் உள்ளது. சிறப்பு வல்லத்திற்கு அருகே செம்புராங்கற்பாறைப் படிவுகளில், தொல்பழங்காலச் சான்றுகள் கிடைக்கின்றன. இங்கு சுரண்டிகள், வெட்டும் கருவிகள் மற்றும் நுண்கற்கருவிகள் காணப்படுகின்றன. வரலாற்றுக்காலத்திலும், வல்லம் ஒரு சிறந்த ஊராகத் திகழ்ந்தது. இங்கு ஒரு கோட்டையும், அதைச் சுற்றிலும் அகழியும் இருந்தது. இங்கு தமிழ்ப் பல்கலைக்கழக கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறைப் பேராசிரியர் எ.சுப்பராயலு அகழாய்வு செய்துள்ளார். இங்கு இரும்புக்கால, சங்ககால மக்கள் வாழ்ந்ததற்கானச் சான்றுகள் அகழாய்வில் வெளிப்பட்டுள்ளன. கருப்பு-சிவப்பு, சிவப்பு மற்றும் கருப்பு நிறப் பானையோடுகளும், இரும்புக்கருவிகள், எலும்புப் பொருள்கள், கல் மணிகள் மற்றும் பிற பொருள்களும் கிடைத்துள்ளன. தமிழ் பிராமி எழுத்துப்பொறிப்புள்ள ஓடுகள் சிலவும் இங்கு கிடைத்துள்ளன. இங்குள்ள கோட்டை,
இடைக்காலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படுகின்றது. தஞ்சாவூருக்குப் பாதுகாப்பளிக்கும்
அரணாக வல்லம் செயல்பட்டுள்ளதாகத் தெரிகின்றது. மேற்கோள் நூல் Y.Susbarayalu, 1984. Vallam Excavation, Tamil Civilizaties. 2 (4), PP. 1 – 98. தி.ஸ்ரீதர், 2005. தஞ்சாவூர் வட்டக் கல்வெட்டுகள், சென்னை, தமிழக அரசு தொல்லியல்
துறை. |